Monday, 28 March 2016

திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி )

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
           திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி ) 
(ஒன்பதாம் திருமுறை

திருமாளிகைத் தேவர்


திருவாவடுதுறை - நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த போக ருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரி யோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.

``போகர் திருமாளிகைத் தேவருக்கு நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூசைசெய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூசித்த நிர்மாலியத்தைக் கருவூர்த் தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூசித்த நிர்மாலியத்தைத் திரு மாளிகைத்தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச் சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர்,` திருமாளிகைத் தேவர் செய்ததே சரி` என்று கூறி `இறைவனைப் பூசிக்கின்ற பூசையே மிகச்சிறந்தது; அவர், நீர் தந்த பூசைப்பொருள்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை`, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாத ருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத் தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார்.

ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து `இதனைப் பூசித்துக்கொண்டு இத்திருவாவடு துறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக` என ஆணை தந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென் றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி,

திருக்கூட்டச் சிறப்பினொடும் செபந்தவந்தியானம் நிட்டை
உருக்கமோ டிருந்துசெய்தற் காகுநல் லிடமா யோங்கும்
பொருப்புறழ் விமானக்கோயில் அருகு தென்புறத்தின் மேவ
அருத்தியி னொடுமிக் கான திருமட மொன்றுண் டாக்கி.
-திருவாவடுதுறைப் புராணம்

தேசிகர் பணித்த வண்ணம் செய்கை தப்பாமல் பேணி
மாசிலா மணிபொற் பாதம் நாடொறும் வணங்கி மிக்க
நேசமொ டாசான் செம்பொன் திருவடி நேர்வைத்தர்ச்சித்
தாசையொ டடியார் கூட்டத்துடன் கலந்தமர்ந் தெந்நாளும்``
-திருவாவடுதுறைப் புராணம்

நவகோடி சித்தர்க்கெல்லா மிடங்கள் நன்கமையப் பண்ணி சிவசமயத்தை நாளும் வளர்த்து நற்செய்கையோடும்

தவமலி நீற்றின் சார்பு உழைத்திடச் சமாதி யோகம்
உவகையொடியற்றி மூல எழுத்தைந்து மோதி.
-திருவாவடுதுறைப் புராணம்

அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார்.

ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடு துறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார்.

திருமாளிகைத்தேவர் ஒரு நாள் காவிரியில் நீராடி, பூசைக் குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்துகொண்டிருந்தார். எதிரே பிணப்பறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச் செல்வ தற்கும் இடமில்லை. பூசைசெய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்கருதி, திருமஞ்சனக்குடம் முதலிய வற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச் செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத் திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித் தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

திருமாளிகைத்தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.

அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து, தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந் தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச்சேனைகளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படைதொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில் நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார். அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார்; அரசன் அருள் பெற்றுச் சென்றான்.

திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது.

இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.

அற்புதங்கள்:

திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச் செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்த காலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார். இன்னோரன்ன அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து, தொட்டிக்கலை ஷ்ரீ சுப்பிரமணிய முனிவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

குடங்கர் விசும் பிடைநிறுவிக் குணபம் நடந்
திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர்
வடங்கழற்றி ஓட்டிமதில் நந்திகளை
வர வழைத்து வரைநன் காட்டின்
உடம்பின்எழு புகைமாற்றிக் கொங்கணர்பாத்
திரம்சுவற்றி உணவ தாய் வெந்
திடும்பயறு முளைசெய்தெமக்(கு) அருள்திருமா ளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி.
-தனிப்பாடல்

திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும். ஷ்ரீ கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேசுவர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இம்மரபை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தனிப்பாடலால் நாம் நன்கு அறியலாம்.

பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன் வீசுகழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
கருதுபந்தி யாதல்வழக் கம்.
-தனிப்பாடல்

திருப்பதிகங்கள்:

திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெரு மானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப் பதிகங்கள் நான்கு ஆகும்.

காலம்:

தஞ்சையில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திரு விசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
 திருச்சிற்றம்பலம் 
  

திருமுறை அருளாளர்கள் - 3

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருமுறை அருளாளர்கள் - 3

திருமுறை அருளாளர்கள் இருபத்தி எழுவரில் முதல் 8 திருமுறைகளை அருளியர்வர்கள் சமயகுரவர்களாகிய,

திருஞானசம்பந்தர் (திருக்கடைக்காப்பு  எனப்போற்றப்படும்முதல்  மூன்று திருமுறைகள்),

திருநாவுக்கரசர் ( தேவாரம் எனப்போற்றப்படும் 4,5,6 வது திருமுறைகள்  ),

தம்பிரான் தோழனாகிய சுந்தரர் (திருப்பாட்டு எனப்போற்றப்படும் 7 வது திருமுறை),

திருவாதவூராகிய மாணிக்கவாசகர் (தெய்வ திருவாசகமும் அருள்திரு திருக்கோவையார் 
ஆகியவையும் 8 ஆம் திருமுறை) 

ஆகியோரின் அருள் சரிதங்களையும் அற்புதங்களையும் நாம் முந்தைய பதிவுகளில் சிந்தனை செய்துள்ளோம். 

திருமுறைகளை தொகுத்து வழங்கிய தமிழ் வேத வியாசர் என போற்றப்படும் நம்பியாண்டார் நம்பி மற்றும் நமக்கெல்லாம் அடியார்களின் பெருமைகளை விவரித்து கூறி பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை அருளிய தெய்வ சேக்கிழார் பற்றியும் முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம். 

இனி திருமுறை வாரியாக ஒவ்வொருவராக சிந்தனை செய்வோம்.  

ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு அருளிய ஒன்பது அருளாலர்களில்,
  1. திருமாளிகைத் தேவர்,
  2. சேந்தனார்,கருவூர்த் 
  3. தேவர்,பூந்துருத்தி 
  4. நம்பிகாடநம்பி,
  5. கண்டராதித்தர்,
  6. வேணாட்டடிகள்,
  7. திருவாலியமுதனார்,
  8. புருடோத்தம நம்பி,
  9. சேதிராயர்


 நாம் முதலில் சிந்திக்க இருப்பது திருமாளிகைத் தேவர்.
         
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 
  

திருமுறை அருளாளர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 
திருமுறை அருளாளர்கள் - 2

தெய்வ சேக்கிழார்  


தெய்வ சேக்கிழார்  என்று சொல்லும்போதே உடலும் உள்ளமும் உருகி இரு கை கூப்பி தொழுகிறது, அடியார்களின் பெருமையும் ஈசனினின் அருளும் உள்ளூர பெருகி கடை விழியோரம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உலகாளும் நாயகனே உலகெலாம் என எடுத்து கொடுத்த அருளினை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

இளமைப் பருவம்

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழனின் என்ற அநபாயசோழருக்கு 

கடலினும் பெரியது எது 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

உலகினும் பெரியது எது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

மலையினும் பெரியது 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் கேளிக்கைகளில் மனதினை செலுத்தி், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார்.

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார். ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இயற்றியுள்ள நூல்கள்
  1. பெரிய புராணம்(உலகெலாம் என தொடங்கி, உலகெலாம் என முடிக்க பெற்ற சிறப்புடைய நூல்)
  2. திருத்தொண்டர் புராணச் சாரம்
  3. திருப்பதிகக்கோவை 

என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்
         
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

    திருச்சிற்றம்பலம் 

திருமுறை அருளாளர்கள் - 1

திருச்சிற்றம்பலம்

திருமுறை அருளாளர்கள் - 1

நம்பியாண்டார் நம்பி



27 திருமுறை அருளாளர்களை பற்றி சிந்திக்கும் போது நாம் முதலில் வணங்க வேண்டியவர் பொல்லா பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பி ஆண்டார் நம்பி. இவர்தான் பிள்ளையாரின் அருளால் ஈசனருள் மிக்க திருமுறைகளை கண்டறிந்து தொகுத்து கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க நம்பி அடிகளாரின் பாதம் பணிந்து திருமுறை அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம். 

நாம் முதலில் சிந்திக்க இருப்பது - நம்பியாண்டார் நம்பி.
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்,திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.கிடைத்தற்கரிய அரும்பெரும் பொக்கிசங்களான திருமுறைகளை பொல்லா பிளையாரின் அருளோடு நமக்கு தொகுத்து வழங்கிய மாபெரும் அருளாளர். 
இளமையும் பொல்லா பிள்ளையாரின் அருளும்:
நம்பி இளமையிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள தொடங்கினர், ஒருமுறை தமது தந்தையார் வெளியாருக்கு சென்று விட்டதால் பொல்லா பிள்ளையாருக்கு பூஜையும் நெய்வேத்திய அமுதும் படைத்தது பிள்ளையாரை அமுதுண்ணும்படி  வேண்டினார்  ஆனால் பிள்ளையார் அமுதுண்ணவில்லை. தந்தை கொடுத்தால்தான் பிள்ளையார் அமுது  உண்ணுவார் எனவும் தன்னுடைய பக்தியில் குறை இருப்பதால்தான்  அமுது  உண்ண மறுக்கிறார் என அழுகொண்டே தனது தலையை பிள்ளையாரின் பாதத்தில் மூட்ட ஆரம்பித்தார். 
கருணை கடவுளானா ஆலால கண்டனின் புத்திரனான ஆணைமுகன் இந்த சிறு பிள்ளையின் பக்தியையும் தூய உள்ளதையும் அனைவரும் அறியும்படி அமுது உண்டு அருள் செய்தார்.  மேலும் இந்த குழந்தைக்கு வேதம் ஆகமங்களின் ஞானத்தினையும் அருள் செய்தார்.
திருமுறைகளை தொகுத்தல் :
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது,
நம்பி ஆண்டார்  நம்பிகளின் பெருமைகளை கேள்வியுற்ற இராஜராஜ  சோழன், இவரிடம் வேண்டி பிள்ளையாரின் அருளால், சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருத்தொண்டர் திருவந்தாதி:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம்திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
11 ஆம் திருமுறைகளின் ஆசிரியர்களில் நம்பியும் ஒருவர் ஆவார்.11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, 
  • திரு இரட்டை மணிமாலை, 
  • கோயில் திருபண்ணியர் விருத்தம், 
  • திருத்தொண்டர் திரு அந்தாதி, 
  • ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, 
  • திரு சண்பை விருத்தம், 
  • திருமும்மணிக்கோவை, 
  • திரு உலாமாலை, திருக்கலம்பகம், 
  • திருத்தொகை, 
  • திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை 

ஆகியன வாகும்
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரவலாக காணலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
     திருச்சிற்றம்பலம் 
  

திருமுறைக அருளாளர்கள்

திருச்சிற்றம்பலம் 

திருமுறைக அருளாளர்கள்

ஒப்பிலா பெருமைகையுடைய கிடைத்தற்கரிய  பொக்கிசங்கள் ஆகிய திருமுறைகளை அருளிய அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம்.

குறிப்பு  - 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகளை அருளிய அருளாளர்கள்:


முதலாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

நான்காம் திருமுறை

           திருநாவுக்கரசு நாயனார்

ஐந்தாம் திருமுறை

          திருநாவுக்கரசு நாயனார்

ஆறாம் திருமுறை

          திருநாவுக்கரசு நாயனார்

ஏழாம் திருமுறை

      சுந்தரமூர்த்தி நாயனார்

எட்டாம் திருமுறை

     மாணிக்கவாசகர்

ஒன்பதாம் திருமுறை - 9 ஆசிரியர்கள்

1. திருமாளிகை தேவர்
2. கண்டராதித்தர்
3. வேணாட்டடிகள்
4. சேதிராசர்
5. பூந்துருத்தி நம்பிகாடநம்பி
6. புருடோத்தம நம்பி
7. திருவாலியமுதனார்
8. சேந்தனார்
9. கருவூர்த்தேவர்

பத்தாம் திருமுறை

திருமூலர்

பதினொன்றாம் திருமுறை  - 12 ஆசிரியர்கள்

1. திருவாலவாயுடையார்
2. கல்லாடதேவ நாயனார்
3. அதிராவடிகள்
4. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
5. இளம்பெருமான் அடிகள்
6. பரணதேவ நாயனார்
7. சேரமான் பெருமான் நாயனார்
8. கபிலதேவ நாயனார்
9. காரைக்கால் அம்மையார்
10. பட்டினத்துப் பிள்ளையார்
11. நக்கீர தேவ நாயனார்
12. நம்பியாண்டார் நம்பி

பன்னிரண்டாம் திருமுறை

       தெய்வ சேக்கிழார்

நாம் அனைவரும் முன்னதாக திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி நாயனார்,மாணிக்கவாசகர் மற்றும் பிறப்பிலா பெருமானே அம்மையே என அழைத்த காரைக்கால் அம்மையார் ஆகியோர்களை பற்றி சிந்திதுள்ளோம்.

இனி வரும் நாட்களில் திருமுறை அருளாளர்களை ஒவ்வொவொருவராக சிந்தனை செய்வோம்.

திருமுறைகளை தினமும் ஓதி உணர்ந்து அருளாளர்கள் பெற்ற பேரின்ப பேரு வாழ்வை நாமும் பெற முயற்சி செய்வோம் 

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
திருச்சிற்றம்பலம் 

Friday, 25 March 2016

கொங்கேழ் தலங்கள்

கொங்கேழ் தலங்கள் 

திருநணா (பவானி),

திருச்செங்கோடு, 
கருவூர் (கரூர்),
திருமுருகன் பூண்டி, 
திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி),
திருப்புக்கொளியூர் (அவிநாசி), 
வெஞ்சமாக்கூடல் 

ஆகிய ஏழும்‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.

மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி:

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடி நாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி.

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு.
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை.

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய நமச்சிவாய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கிமீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர்.


Sunday, 20 March 2016

சிவம் - உருவநிலை 3

சிவமயம்

திருச்சிற்றம்பலம

சிவம் - உருவநிலை  3

லிங்கமூர்த்தி


லிங்கம் விளக்கம்: 

நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.



மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள்



திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் 




"நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்

 நாமும் நம்முடுடைய குருமார்களாகிய புறச்சந்தான குரவர்கள் பற்றி சிந்தனை செய்து அவர்கள் காட்டிய சைவ நெறியில் நின்று அவனருள் பெற முயற்சி செய்வோம் 
புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்
     
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 4

              திருச்சிற்றம்பலம் 
புறச்சந்தான குரவர்கள் - 4
உமாபதி சிவாசாரியர்



உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

இளமைக் காலம்

13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.

நூல்கள்

மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. 

கொடிக்கவி பாடிய வரலாறு

சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
          
               மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3
மறைஞான சம்பந்தர்



மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மறைஞானசம்பந்தரின் சைவப் பணிகளுள் பிரதானமானது சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தமையாகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகியசிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணக்கருக்குக் கற்பித்தார்.
மறைஞானசம்பந்தரது பெருமைகளையும், அவரது சைவ சித்தாந்தப் பணிகளையும், இவரின் சீடராகிய உமாபதி சிவாச்சாரியார் தனது நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் மட்டுமே சித்தாந்த நூல்கள் எதனையும் எழுதவில்லை. 
         மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம்