Showing posts with label புறச்சந்தான குரவர்கள். Show all posts
Showing posts with label புறச்சந்தான குரவர்கள். Show all posts

Sunday, 20 March 2016

புறச்சந்தான குரவர்கள்



திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் 




"நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்

 நாமும் நம்முடுடைய குருமார்களாகிய புறச்சந்தான குரவர்கள் பற்றி சிந்தனை செய்து அவர்கள் காட்டிய சைவ நெறியில் நின்று அவனருள் பெற முயற்சி செய்வோம் 
புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்
     
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 4

              திருச்சிற்றம்பலம் 
புறச்சந்தான குரவர்கள் - 4
உமாபதி சிவாசாரியர்



உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

இளமைக் காலம்

13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.

நூல்கள்

மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. 

கொடிக்கவி பாடிய வரலாறு

சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
          
               மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3
மறைஞான சம்பந்தர்



மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மறைஞானசம்பந்தரின் சைவப் பணிகளுள் பிரதானமானது சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தமையாகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகியசிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணக்கருக்குக் கற்பித்தார்.
மறைஞானசம்பந்தரது பெருமைகளையும், அவரது சைவ சித்தாந்தப் பணிகளையும், இவரின் சீடராகிய உமாபதி சிவாச்சாரியார் தனது நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் மட்டுமே சித்தாந்த நூல்கள் எதனையும் எழுதவில்லை. 
         மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 2

அருள் நந்தி சிவாச்சாரியார்





அருணந்தி சிவாச்சாரியார், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.
இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.
மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்
பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
நூல்கள்
மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே.
சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 1


 திருச்சிற்றம்பலம் 


புறச்சந்தான குரவர்கள்  - 1 
மெய்கண்டார்

சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதான சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.
மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், வேளாண் குடியில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
பிறப்பு
திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை. அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"
சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை, பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசிக்கலானார்கள். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
கனவிலிருந்து விழித்துக்க் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்த கனவினை, தன மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
இளம் பராயம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார். இப் பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும்.
நூற் பணி
தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களை தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல்
இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
முத்தி
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்


திருச்சிற்றம்பலம்