Showing posts with label thennadudaiya sivam. Show all posts
Showing posts with label thennadudaiya sivam. Show all posts

Sunday, 20 March 2016

புறச்சந்தான குரவர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 2

அருள் நந்தி சிவாச்சாரியார்





அருணந்தி சிவாச்சாரியார், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.
இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.
மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்
பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
நூல்கள்
மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே.
சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

Friday, 4 March 2016

சமய குரவர்கள் வரலாறு 4 (திருவாதவூரடிகள்)

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சமய குரவர்கள் வரலாறு 4

திருவாதவூரடிகள்


தொல்லை இரும்பிறவிச்சூழும் தளைநீக்கி 
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை 
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் 
திருவாசகம் என்னும் தேன்.

'''மாணிக்கவாசகர்'''  சைவ சமயக் குரவர்கள் நால்வரில்  ஒருவராவர். முன்னைய  மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.
இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

வரலாறு

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது:
"திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.

நரியைப் பரியாக்கியது

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.
வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல)
'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.
பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தஞ்சம் அடைந்தார்.
உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

வைகை வெள்ளமும் வந்தியும்

சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.
உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.
அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.

இறைவன் எழுதியவை

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.

வாழ்ந்த காலகட்டம்

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.
சுந்தரருக்கு பிற்பட்ட காலத்தவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.

அற்புதங்கள்


  • சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
  • பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
  • தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
  • எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 


 மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 
  
                                            

சமய குரவர்கள் வரலாறு 3 (சுந்தரமூர்த்தி நாயனார்)

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சமய குரவர்கள் வரலாறு 3

சுந்தரமூர்த்தி நாயனார்


  "தம்பிரான் தோழன் அடியார்க்கும் அடியேன்"

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலைச் சுவடியைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சுந்தரர் அருளிய திருப்பதிக்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரம்|தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள்,ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இருவ பெண்களை மணம் புரிந்தார். அரசரான சேரமான் பெருமாள் நாயனார் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்தார்.
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் சைவத்திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அற்புதங்கள்


  • செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
  • சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள (மணிமுத்தாறு)ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில(கமலாலயம்) எடுத்தது.
  • காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
  • அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
  • வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
- சுந்தரர் தேவாரம்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
       திருச்சிற்றம்பலம்
                                     
                                           

சமய குரவர்கள் வரலாறு 2 (திருநாவுக்கரசர்)

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சமய குரவர்கள் வரலாறு 2

திருநாவுக்கரசர்



"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்"

திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல  புகழனார் - மாதினியார் மகனாகப் பிறந்தவர். 
தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார்.
இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! 
தமக்கையின் வேண்டுதலால் (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும் சைவஞானியானவர்.

" கூற்றாயினவாறு விலக்க கிலீர்" 

எனும் திருப்பதிகத்தை இவர் பாடியதும், கேட்டு மகிழ்ந்த திருவதிகை வீரட்டானேசுவரர். இவருக்கு " திருநாவுக்கரசர் " எனும் புகழ்ப் பெயர் கொடுத்தார்.
மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை - மதம் மாறியதற்காக - பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

" மாசில்வீணையும் " ,
 " சொற்றுணை வேதியன் " 

முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின " ஜூஸ் " ஆகும்.
சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.
திருஞான சம்பந்தர் குழந்தை, இவர் முதியவர் இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். சம்பந்தர் இவரை அழைத்ததுதான் " அப்பர் " எனும் திருப்பெயர்.
திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் - ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார்.


" சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே."
- அப்பர் தேவாரம்
      
        திருச்சிற்றம்பலம்

சமய குரவர்கள் வரலாறு 1 (திருஞான சம்பந்தர்)

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சமய குரவர்கள் வரலாறு 1 

திருஞான சம்பந்தர்



"வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் 
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா 
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்"

சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர்.
மூன்று வயதிலேயே... ஈசனருள் பெற்று... சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர்.

திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த கடுமையான நளிர் சுர நோயைத்தீர்த்தவர்.
திருக்நெல்வாயில் சிவனருளால் முத்துச்சிவிகையும், பட்டீஸ்வரத்திலே முத்துப் பந்தரும் பெற்றவர்.

பதிகங்களைப்பாடி, பாம்பு கடித்து மாண்ட வணிகனைக் காத்தது, சிவனிடமே படிக்காசு பெற்றது, மக்களின் பஞ்ச வறுமைகளைப் போக்கியது. திருமறைக் காட்டிலே (வேதாரண்யம்) கோயில் கதவு அற்புதம், மதுரையிலே அனல் வாதம், புனல் வாதம் புரிந்து " மந்திரமாவதுநீறு" பாடி பாண்டியனின் வெப்பு நோயையும், பலமதத்தவரின் விதண்டாவாதங்களையும் வென்றவர்.
சென்னைத் திருமயிலையிலே மாண்டு போன சிவநேசச்செட்டியார் மகளின் எலும்புகளை " மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை " எனும் பதிகம் பாடி " பூம்பாவைப் " பெண்ணாக்கி " மகளே!" என்றழைத்த மாசில்லாத் தவசிலர்.

ஆச்சாபுரத்திலே திருமணம் செய்து கொண்டு, " காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி " எனும் பதிகத்தைப் பாடி முடித்து மணப்பந்தலிலேயே ஒளிச்சுடராய் மாறி, இறைவனோடு இரண்டறக் கலந்தவர் திருஞான சம்பந்தமூர்த்தி.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

சம்பந்தர் தேவாரம்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
        திருச்சிற்றம்பலம்