Wednesday, 6 July 2016

சிவம் - உருவநிலை 1


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிவம் - உருவநிலை  1

சேயிடைச் செல்வர் (சோமாசுகந்தர்)




சேயிடைச் செல்வர் என்பது சிவபெருமானின் 25 வடிவங்களில் ஒன்று. சிவனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் சிறு குழந்தையாக முருகன் அமர்ந்திருக்கும் திருக்கோலமேசோமாசுகந்தர் வடிவம் எனப்படும்.
சூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சசிவபெருமானிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க சிவபெருமான் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள்.
ஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சேயிடைச் செல்வர் என்று அழைக்கின்றார்கள்.
திருவாரூர் தியாகராச சுவாமி கோயில்,
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயில்,
குமரக்கோட்டம்,
காமாட்சியம்மன் கோயில்,
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
உள்ளிட்ட பல தலங்களில் சோமாசுகந்தர் வடிவத்தை தரிசிக்கலாம்
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

சிவம் - உருவநிலை


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


  சிவம் - உருவநிலை 

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத்தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. 
இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாடு

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்

      மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள்.
  1. சோமாஸ்கந்தர் - திருவாரூர்
  2. நடராஜர் - சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
  6. பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  7. காமசம்ஹாரர் - குறுக்கை
  8. கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
  9. சலந்தராகரர் - திருவிற்குடி
  10. திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
  11. கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  12. வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
  13. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
  14. கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
  15. கங்காளர் - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
  16. சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
  17. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
  18. சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
  19. ஏகபாதமூர்த்தி - மதுரை
  20. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
  21. சுகாசனர் - காஞ்சிபுரம்
  22. உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
  23. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
  24. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
  25. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங்களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவரமூர்த்திவகை



  • ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
  • தற்புருஷம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
  • அகோரம் - கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
  • வாமதேவம் - கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
  • சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்
  • அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், 
    வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

    சிவசக்தி

    சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

    இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.
    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
     திருச்சிற்றம்பலம்

    சிவம்

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    சிவம்

    முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

    முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள 

    அருவம், 
    அருவுருவம், 
    உருவம் 

    ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

    அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; 

    அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; 

    உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப்பர். 

    இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.

    அருவம், உருவம் மற்றும் அருவுருவம் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்திப்போம்.

     மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

    திருமுறை அருளாளர்கள் - 4

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    திருமுறை அருளாளர்கள் - 4 

    (ஒன்பதாம் திருமுறை)

    சேந்தனார்

    திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். பட்டினத்தாரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதில் உள்ள பொருள்களை அள்ளிக்கொள்ளுமாறு செய்தார். அது பொழுது பட்டினத்தாரின் சுற்றத்தார்கள் சோழ வேந்தனிடம் சென்று முறையிட்டனர். சோழமன்னன் சேந்தனாரைச் சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான்.

    மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்n
    நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திn
    செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டn
    கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.n
    -தனிப்பாடல்n
    எனப் பட்டினத்தார் இறைவனை வேண்டினார்.
    சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையினின்றும் விடுதலை பெற்றார். மனைவி மக்களுடன் தில்லையம்பதி சென்று, விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்திவந்தார். நாள்தோறும் விறகுவிற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அருத்தும் திருத் தொண்டாற்றி வந்தார்.

    ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட் டிற்கு எழுந்தருளினார். சேந்தனார் அளித்த களியாகிய உணவினை ஏற்று அதன் ஒரு பகுதியைத் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார். இதனை, 

    ``செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே`` என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.
    சேந்தனார் நடராசப் பெருமானுக்குத் தவிட்டை அமுதாக நிவேதனம் செய்தார் என்னும் செய்தியை,
    ``வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை``
    என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.
    ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழா வந்தது. நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அது கண்ட சேந்தனார் இறையருளால் திருப்பல்லாண்டு பாடி, தானே அத் தேர் ஓடி நிலைக்கு வருமாறு செய்தார். சேந்தனார் திருக்கடவூருக்கு அண்மையில் உள்ள திரு விடைக்கழி என்னும் தலத்தை அடைந்து, கந்தவேளை வழிபட்டுக் கொண்டு, அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். சேந்தனார் திருமடத்துக்கு அக்காலத்து மன்னன் நிலமளித்து உதவினன். அந்நிலப்பகுதி உள்ள இடம் சேந்தன்மங்கலம் என்று வழங்கப்பட்டது. இச்செய்தி திருவிடைக்கழி புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப் பெயருடன் இருக்கின்றது.

    இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். சேந்தன் மங்கலம் இன்று முகமதியர்களின் உறைவிடமாக உள்ளது.

    கருத்து வேற்றுமைகள்: 

    சேந்தனார் செப்புரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பாப் பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக் கிழார் கூறுவர். முதல் இராஜராஜசோழன் (கி.பி. 985 -1014) ஆட்சியில் திருவீழிமிழலைக் கோயிலில் திருநந்தாவிளக்கு வைத்த ஜயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும், திருமாளிகைத்தேவர் என்றும் கல் வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளார். ஜெயந்தன் என்ற பெயரின் திரிபே சேந்தன் என மருவிற்று என்றும், சேந்தனாரும் திருமாளிகைத் தேவ ரும் ஒருவரே என்றும் மு. இராகவஅய்யங்கார் அவர்கள் கூறுவர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம், திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் அருளிய நான்கு பதிகங்களை அடுத்து, சேந்தனார் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் மூன்றும் அமைந்திருத்தலாலும், கடைசித் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் சேந்தன் என்ற பெயர் குறிக்கப் பெற்றிருப்பதாலும் இப்பதிகங்கள் அனைத்தையும் ஒருவரே பாடியிருத்தல் கூடும் எனக் கருதுவர். இக்கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சேந்தனார், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக் கழி ஆகிய முத்தலங்களுக்கு, மூன்று திருவிசைப்பாப் பதிகங்களை யும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.

    காலம்:

    கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்

              மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
           திருச்சிற்றம்பலம் 

    அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்
    அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

    திருநந்திதேவர்



    நம்பிரான் திருமூலரின் திருமந்திரதில் இருந்து நாம் நந்தி பெருமானை பற்றி நன்கு உணரலாம்.

    நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

    நந்தியெம் பெருமான்பால் அவர்தம் திருவருட்டுணையால் பொருள்மறை கேட்டுப் போற்றி யொழுகும் மெய்கண்டார் நால்வராவர். மெய்கண்டார் - மாணவர். அவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ப. சிவயோக மாமுனிவர், பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால் முனிவர், வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் ஆகிய மூவர். தன்னொடுங் கூட்டி எண்மர் என்றனர். நாதர் - செந்நெறிமுதல்வர்; சித்தாந்த ஆசிரியர்.

    நந்திகள் நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். மன்று தொழுத பதஞ்சலி - தில்லையில் நடம் கண்ட பதஞ்சலி முனிவர்.

    நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
    நந்தி அருளாலே மூலனை நாடினோம்
    நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

    தன்னை முழுமுதற் சிவனாம் தலைவற்கு அடிமையாக ஒப்புவித்தவர் அத் திருவருளால் நாதன் எனப்படுவர். அச் சிறப்புப் பெயரே பெயராக அழைக்கவும்படுவர். அந் நந்தியின் அருளாலே ஆ மேய்க்கும் மூலன் திருவுருவின்கண் புகுந்தேன். நந்தி அருளாவது நாட்டினில் என்செயுமெனின்? நந்தி வழிகாட்டவே நானிருந்து முந்திய தொண்டெலாம் முயல்கின்றேன். நந்தி - ஆலமர் செல்வன். வழிகாட்ட - சித்தாந்த நெறிகாட்ட. அடிமையாயினார்க்கு நந்தியருள் எல்லாம் இனிதினியற்றும் என்க.

    நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

    "செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
    நம் பவமறுத்த நந்திவானவர்"

    எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    அதிகார நந்தி

    நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

    அதிகார நந்தியும் கருடரும்

    கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
    தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

    பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார் என்பது ஐதீகம். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

    நந்திஎம்பெருமானை தவிர்த்து ஏனையோர்களை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கபெற வில்லை. அடியார்கள் யாரேனும் அனைவருக்கும் உணர்த்தலாம் 

     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
        திருச்சிற்றம்பலம் 

    அகச்சந்தான குரவர்கள்


    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்

    அகச்சந்தான குரவர்கள்


    அகச்சந்தான குரவர்கள் என அழைக்கப்படும் நான்கு குருமார்களும் கயிலாயத்தில் வாழும் கயிலாய பரம்பரையினர் ஆவார். எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய நம்பெருமான் ஈசனே சிவாகமத்தை நேரடியாகத் திருநந்திதேவர் அவர்களுக்கு உபதேசித்து அருளியவர். 

    "நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
    அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
    அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
    புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
    - காஞ்சிப் புராணம்

                       1. திருநந்திதேவர்



                       2. சனற்குமாரர்


                       3. சத்தியஞான தரிசினிகள்

                       4. பரஞ்சோதியார் 




    நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
    திருச்சிற்றம்பலம்