Wednesday 6 July 2016

அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அகச்சந்தான குரவர்கள் - தொடர்ச்சி

திருநந்திதேவர்



நம்பிரான் திருமூலரின் திருமந்திரதில் இருந்து நாம் நந்தி பெருமானை பற்றி நன்கு உணரலாம்.

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

நந்தியெம் பெருமான்பால் அவர்தம் திருவருட்டுணையால் பொருள்மறை கேட்டுப் போற்றி யொழுகும் மெய்கண்டார் நால்வராவர். மெய்கண்டார் - மாணவர். அவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ப. சிவயோக மாமுனிவர், பதஞ்சலியார் எனப்படும் பாம்புக்கால் முனிவர், வியாக்கிரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர் ஆகிய மூவர். தன்னொடுங் கூட்டி எண்மர் என்றனர். நாதர் - செந்நெறிமுதல்வர்; சித்தாந்த ஆசிரியர்.

நந்திகள் நால்வர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர். மன்று தொழுத பதஞ்சலி - தில்லையில் நடம் கண்ட பதஞ்சலி முனிவர்.

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.

தன்னை முழுமுதற் சிவனாம் தலைவற்கு அடிமையாக ஒப்புவித்தவர் அத் திருவருளால் நாதன் எனப்படுவர். அச் சிறப்புப் பெயரே பெயராக அழைக்கவும்படுவர். அந் நந்தியின் அருளாலே ஆ மேய்க்கும் மூலன் திருவுருவின்கண் புகுந்தேன். நந்தி அருளாவது நாட்டினில் என்செயுமெனின்? நந்தி வழிகாட்டவே நானிருந்து முந்திய தொண்டெலாம் முயல்கின்றேன். நந்தி - ஆலமர் செல்வன். வழிகாட்ட - சித்தாந்த நெறிகாட்ட. அடிமையாயினார்க்கு நந்தியருள் எல்லாம் இனிதினியற்றும் என்க.

நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

"செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்"

எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

அதிகார நந்தி

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில் அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்

கைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார்.

பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுகிறார் என்பது ஐதீகம். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

நந்திஎம்பெருமானை தவிர்த்து ஏனையோர்களை பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கபெற வில்லை. அடியார்கள் யாரேனும் அனைவருக்கும் உணர்த்தலாம் 

 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment