திருச்சிற்றம்பலம்
அருணந்தி சிவாச்சாரியார், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.
இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.
மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்
பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
நூல்கள்
மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே.
சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment