Wednesday, 6 July 2016

சிவம் - உருவநிலை


சிவமயம்

திருச்சிற்றம்பலம்


  சிவம் - உருவநிலை 

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத்தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. 
இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாடு

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல்

      மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள்.
  1. சோமாஸ்கந்தர் - திருவாரூர்
  2. நடராஜர் - சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
  6. பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  7. காமசம்ஹாரர் - குறுக்கை
  8. கால சம்ஹாரர் - திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
  9. சலந்தராகரர் - திருவிற்குடி
  10. திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
  11. கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
  12. வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - (நாகப்பட்டினம்)
  13. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
  14. கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர் கோயில்)
  15. கங்காளர் - திருச்செங்காட்டங்ுடி( திருவாரூர்)
  16. சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
  17. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
  18. சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
  19. ஏகபாதமூர்த்தி - மதுரை
  20. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
  21. சுகாசனர் - காஞ்சிபுரம்
  22. உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
  23. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
  24. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
  25. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)
என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங்களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியாகவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவரமூர்த்திவகை



  • ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
  • தற்புருஷம் - பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராகரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்
  • அகோரம் - கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
  • வாமதேவம் - கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
  • சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்
  • அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், 
    வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். 
    யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

    சிவசக்தி

    சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

    இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.
    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
     திருச்சிற்றம்பலம்

    No comments:

    Post a Comment