Tuesday, 8 March 2016

சிவபெருமான் சிறு குறிப்புக்கள் கேள்வி பதில் வடிவில்

திருச்சிற்றம்பலம் 

சிவபெருமான் சிறு குறிப்புக்கள் கேள்வி பதில் வடிவில் 

உலகெல்லாம்  உணர்ந்து  ஓதற்கு அறிய நம்பெருமானை பற்றிய சில சிறு குறிப்புக்கள் கேள்பதில் வடிவில்.

உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; யார்க்கும் ஆட்படாதவர்.
சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமானின் குணங்கள் யாவை?
  • சிவபெருமானின் குண விஷேசங்கள் எட்டுக்குணமென்று போற்றப்படும். அவை
  • முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)
  • இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே அறிதல்)
  • முற்றறிவு உடைமை (எல்லாவற்றையும் அறியும் திறம்)
  • தூய உடம்பினன்
  • இயல்பாகவே மலமற்றவன்
  • வரம்பில்லாத ஆற்றல் உடையவன்
  • வரம்பில்லாத அருள் உடையவன்
  • வரம்பில்லாத இன்பம் உடையவன்

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.

தனு கரண புவன போகம் என்றது என்ன?

தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.

சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?

தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.

சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை

சிவபெருமானின் சத்தி யாவர்?

உமாதேவியார்

சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?

திருக்கயிலை மலை.'

சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.

சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

சைவம்

சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?

திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.

இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

சிவ புண்ணியம் யாது?

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.

                     மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்                                 திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment