Monday, 28 March 2016

திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி )

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
           திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி ) 
(ஒன்பதாம் திருமுறை

திருமாளிகைத் தேவர்


திருவாவடுதுறை - நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த போக ருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரி யோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.

``போகர் திருமாளிகைத் தேவருக்கு நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூசைசெய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூசித்த நிர்மாலியத்தைக் கருவூர்த் தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூசித்த நிர்மாலியத்தைத் திரு மாளிகைத்தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச் சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர்,` திருமாளிகைத் தேவர் செய்ததே சரி` என்று கூறி `இறைவனைப் பூசிக்கின்ற பூசையே மிகச்சிறந்தது; அவர், நீர் தந்த பூசைப்பொருள்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை`, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாத ருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத் தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார்.

ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து `இதனைப் பூசித்துக்கொண்டு இத்திருவாவடு துறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக` என ஆணை தந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென் றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி,

திருக்கூட்டச் சிறப்பினொடும் செபந்தவந்தியானம் நிட்டை
உருக்கமோ டிருந்துசெய்தற் காகுநல் லிடமா யோங்கும்
பொருப்புறழ் விமானக்கோயில் அருகு தென்புறத்தின் மேவ
அருத்தியி னொடுமிக் கான திருமட மொன்றுண் டாக்கி.
-திருவாவடுதுறைப் புராணம்

தேசிகர் பணித்த வண்ணம் செய்கை தப்பாமல் பேணி
மாசிலா மணிபொற் பாதம் நாடொறும் வணங்கி மிக்க
நேசமொ டாசான் செம்பொன் திருவடி நேர்வைத்தர்ச்சித்
தாசையொ டடியார் கூட்டத்துடன் கலந்தமர்ந் தெந்நாளும்``
-திருவாவடுதுறைப் புராணம்

நவகோடி சித்தர்க்கெல்லா மிடங்கள் நன்கமையப் பண்ணி சிவசமயத்தை நாளும் வளர்த்து நற்செய்கையோடும்

தவமலி நீற்றின் சார்பு உழைத்திடச் சமாதி யோகம்
உவகையொடியற்றி மூல எழுத்தைந்து மோதி.
-திருவாவடுதுறைப் புராணம்

அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார்.

ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடு துறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார்.

திருமாளிகைத்தேவர் ஒரு நாள் காவிரியில் நீராடி, பூசைக் குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்துகொண்டிருந்தார். எதிரே பிணப்பறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச் செல்வ தற்கும் இடமில்லை. பூசைசெய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்கருதி, திருமஞ்சனக்குடம் முதலிய வற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச் செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத் திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித் தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

திருமாளிகைத்தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.

அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து, தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந் தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச்சேனைகளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படைதொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில் நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார். அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார்; அரசன் அருள் பெற்றுச் சென்றான்.

திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது.

இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.

அற்புதங்கள்:

திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச் செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்த காலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார். இன்னோரன்ன அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து, தொட்டிக்கலை ஷ்ரீ சுப்பிரமணிய முனிவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

குடங்கர் விசும் பிடைநிறுவிக் குணபம் நடந்
திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர்
வடங்கழற்றி ஓட்டிமதில் நந்திகளை
வர வழைத்து வரைநன் காட்டின்
உடம்பின்எழு புகைமாற்றிக் கொங்கணர்பாத்
திரம்சுவற்றி உணவ தாய் வெந்
திடும்பயறு முளைசெய்தெமக்(கு) அருள்திருமா ளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி.
-தனிப்பாடல்

திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும். ஷ்ரீ கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேசுவர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இம்மரபை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தனிப்பாடலால் நாம் நன்கு அறியலாம்.

பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன் வீசுகழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
கருதுபந்தி யாதல்வழக் கம்.
-தனிப்பாடல்

திருப்பதிகங்கள்:

திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெரு மானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப் பதிகங்கள் நான்கு ஆகும்.

காலம்:

தஞ்சையில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திரு விசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
 திருச்சிற்றம்பலம் 
  

திருமுறை அருளாளர்கள் - 3

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருமுறை அருளாளர்கள் - 3

திருமுறை அருளாளர்கள் இருபத்தி எழுவரில் முதல் 8 திருமுறைகளை அருளியர்வர்கள் சமயகுரவர்களாகிய,

திருஞானசம்பந்தர் (திருக்கடைக்காப்பு  எனப்போற்றப்படும்முதல்  மூன்று திருமுறைகள்),

திருநாவுக்கரசர் ( தேவாரம் எனப்போற்றப்படும் 4,5,6 வது திருமுறைகள்  ),

தம்பிரான் தோழனாகிய சுந்தரர் (திருப்பாட்டு எனப்போற்றப்படும் 7 வது திருமுறை),

திருவாதவூராகிய மாணிக்கவாசகர் (தெய்வ திருவாசகமும் அருள்திரு திருக்கோவையார் 
ஆகியவையும் 8 ஆம் திருமுறை) 

ஆகியோரின் அருள் சரிதங்களையும் அற்புதங்களையும் நாம் முந்தைய பதிவுகளில் சிந்தனை செய்துள்ளோம். 

திருமுறைகளை தொகுத்து வழங்கிய தமிழ் வேத வியாசர் என போற்றப்படும் நம்பியாண்டார் நம்பி மற்றும் நமக்கெல்லாம் அடியார்களின் பெருமைகளை விவரித்து கூறி பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை அருளிய தெய்வ சேக்கிழார் பற்றியும் முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம். 

இனி திருமுறை வாரியாக ஒவ்வொருவராக சிந்தனை செய்வோம்.  

ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு அருளிய ஒன்பது அருளாலர்களில்,
  1. திருமாளிகைத் தேவர்,
  2. சேந்தனார்,கருவூர்த் 
  3. தேவர்,பூந்துருத்தி 
  4. நம்பிகாடநம்பி,
  5. கண்டராதித்தர்,
  6. வேணாட்டடிகள்,
  7. திருவாலியமுதனார்,
  8. புருடோத்தம நம்பி,
  9. சேதிராயர்


 நாம் முதலில் சிந்திக்க இருப்பது திருமாளிகைத் தேவர்.
         
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 
  

திருமுறை அருளாளர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 
திருமுறை அருளாளர்கள் - 2

தெய்வ சேக்கிழார்  


தெய்வ சேக்கிழார்  என்று சொல்லும்போதே உடலும் உள்ளமும் உருகி இரு கை கூப்பி தொழுகிறது, அடியார்களின் பெருமையும் ஈசனினின் அருளும் உள்ளூர பெருகி கடை விழியோரம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உலகாளும் நாயகனே உலகெலாம் என எடுத்து கொடுத்த அருளினை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

இளமைப் பருவம்

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழனின் என்ற அநபாயசோழருக்கு 

கடலினும் பெரியது எது 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

உலகினும் பெரியது எது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

மலையினும் பெரியது 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் கேளிக்கைகளில் மனதினை செலுத்தி், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார்.

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார். ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இயற்றியுள்ள நூல்கள்
  1. பெரிய புராணம்(உலகெலாம் என தொடங்கி, உலகெலாம் என முடிக்க பெற்ற சிறப்புடைய நூல்)
  2. திருத்தொண்டர் புராணச் சாரம்
  3. திருப்பதிகக்கோவை 

என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்
         
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

    திருச்சிற்றம்பலம் 

திருமுறை அருளாளர்கள் - 1

திருச்சிற்றம்பலம்

திருமுறை அருளாளர்கள் - 1

நம்பியாண்டார் நம்பி



27 திருமுறை அருளாளர்களை பற்றி சிந்திக்கும் போது நாம் முதலில் வணங்க வேண்டியவர் பொல்லா பிள்ளையாரின் அருள் பெற்ற நம்பி ஆண்டார் நம்பி. இவர்தான் பிள்ளையாரின் அருளால் ஈசனருள் மிக்க திருமுறைகளை கண்டறிந்து தொகுத்து கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க நம்பி அடிகளாரின் பாதம் பணிந்து திருமுறை அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம். 

நாம் முதலில் சிந்திக்க இருப்பது - நம்பியாண்டார் நம்பி.
நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்,திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் அருள்பெற்றவர். திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.கிடைத்தற்கரிய அரும்பெரும் பொக்கிசங்களான திருமுறைகளை பொல்லா பிளையாரின் அருளோடு நமக்கு தொகுத்து வழங்கிய மாபெரும் அருளாளர். 
இளமையும் பொல்லா பிள்ளையாரின் அருளும்:
நம்பி இளமையிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள தொடங்கினர், ஒருமுறை தமது தந்தையார் வெளியாருக்கு சென்று விட்டதால் பொல்லா பிள்ளையாருக்கு பூஜையும் நெய்வேத்திய அமுதும் படைத்தது பிள்ளையாரை அமுதுண்ணும்படி  வேண்டினார்  ஆனால் பிள்ளையார் அமுதுண்ணவில்லை. தந்தை கொடுத்தால்தான் பிள்ளையார் அமுது  உண்ணுவார் எனவும் தன்னுடைய பக்தியில் குறை இருப்பதால்தான்  அமுது  உண்ண மறுக்கிறார் என அழுகொண்டே தனது தலையை பிள்ளையாரின் பாதத்தில் மூட்ட ஆரம்பித்தார். 
கருணை கடவுளானா ஆலால கண்டனின் புத்திரனான ஆணைமுகன் இந்த சிறு பிள்ளையின் பக்தியையும் தூய உள்ளதையும் அனைவரும் அறியும்படி அமுது உண்டு அருள் செய்தார்.  மேலும் இந்த குழந்தைக்கு வேதம் ஆகமங்களின் ஞானத்தினையும் அருள் செய்தார்.
திருமுறைகளை தொகுத்தல் :
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது,
நம்பி ஆண்டார்  நம்பிகளின் பெருமைகளை கேள்வியுற்ற இராஜராஜ  சோழன், இவரிடம் வேண்டி பிள்ளையாரின் அருளால், சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருத்தொண்டர் திருவந்தாதி:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுருக்கமாகத் தம்திருத்தொண்டத் தொகையுள் அடையாளம் காட்டிய சிவனடியார்கள் வரலாற்றை ஓரளவு இனம் கண்டு தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் விரித்துரைத்தவர். தேவாரமூவர் மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டவர். பெரியபுராண உருவாக்கத்திற்கு இவர் நூல்கள் பெருந்துணையாக நின்றன.
11 ஆம் திருமுறைகளின் ஆசிரியர்களில் நம்பியும் ஒருவர் ஆவார்.11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, 
  • திரு இரட்டை மணிமாலை, 
  • கோயில் திருபண்ணியர் விருத்தம், 
  • திருத்தொண்டர் திரு அந்தாதி, 
  • ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, 
  • திரு சண்பை விருத்தம், 
  • திருமும்மணிக்கோவை, 
  • திரு உலாமாலை, திருக்கலம்பகம், 
  • திருத்தொகை, 
  • திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை 

ஆகியன வாகும்
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரவலாக காணலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
     திருச்சிற்றம்பலம் 
  

திருமுறைக அருளாளர்கள்

திருச்சிற்றம்பலம் 

திருமுறைக அருளாளர்கள்

ஒப்பிலா பெருமைகையுடைய கிடைத்தற்கரிய  பொக்கிசங்கள் ஆகிய திருமுறைகளை அருளிய அருளாளர்களை பற்றி சிந்தனை செய்வோம்.

குறிப்பு  - 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகளை அருளிய அருளாளர்கள்:


முதலாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

நான்காம் திருமுறை

           திருநாவுக்கரசு நாயனார்

ஐந்தாம் திருமுறை

          திருநாவுக்கரசு நாயனார்

ஆறாம் திருமுறை

          திருநாவுக்கரசு நாயனார்

ஏழாம் திருமுறை

      சுந்தரமூர்த்தி நாயனார்

எட்டாம் திருமுறை

     மாணிக்கவாசகர்

ஒன்பதாம் திருமுறை - 9 ஆசிரியர்கள்

1. திருமாளிகை தேவர்
2. கண்டராதித்தர்
3. வேணாட்டடிகள்
4. சேதிராசர்
5. பூந்துருத்தி நம்பிகாடநம்பி
6. புருடோத்தம நம்பி
7. திருவாலியமுதனார்
8. சேந்தனார்
9. கருவூர்த்தேவர்

பத்தாம் திருமுறை

திருமூலர்

பதினொன்றாம் திருமுறை  - 12 ஆசிரியர்கள்

1. திருவாலவாயுடையார்
2. கல்லாடதேவ நாயனார்
3. அதிராவடிகள்
4. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
5. இளம்பெருமான் அடிகள்
6. பரணதேவ நாயனார்
7. சேரமான் பெருமான் நாயனார்
8. கபிலதேவ நாயனார்
9. காரைக்கால் அம்மையார்
10. பட்டினத்துப் பிள்ளையார்
11. நக்கீர தேவ நாயனார்
12. நம்பியாண்டார் நம்பி

பன்னிரண்டாம் திருமுறை

       தெய்வ சேக்கிழார்

நாம் அனைவரும் முன்னதாக திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார்,சுந்தரமூர்த்தி நாயனார்,மாணிக்கவாசகர் மற்றும் பிறப்பிலா பெருமானே அம்மையே என அழைத்த காரைக்கால் அம்மையார் ஆகியோர்களை பற்றி சிந்திதுள்ளோம்.

இனி வரும் நாட்களில் திருமுறை அருளாளர்களை ஒவ்வொவொருவராக சிந்தனை செய்வோம்.

திருமுறைகளை தினமும் ஓதி உணர்ந்து அருளாளர்கள் பெற்ற பேரின்ப பேரு வாழ்வை நாமும் பெற முயற்சி செய்வோம் 

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
திருச்சிற்றம்பலம் 

Friday, 25 March 2016

கொங்கேழ் தலங்கள்

கொங்கேழ் தலங்கள் 

திருநணா (பவானி),

திருச்செங்கோடு, 
கருவூர் (கரூர்),
திருமுருகன் பூண்டி, 
திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி),
திருப்புக்கொளியூர் (அவிநாசி), 
வெஞ்சமாக்கூடல் 

ஆகிய ஏழும்‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.

மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி:

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடி நாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி.

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு.
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை.

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய நமச்சிவாய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கிமீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர்.


Sunday, 20 March 2016

சிவம் - உருவநிலை 3

சிவமயம்

திருச்சிற்றம்பலம

சிவம் - உருவநிலை  3

லிங்கமூர்த்தி


லிங்கம் விளக்கம்: 

நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும். வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர். இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.



மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள்



திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் 




"நந்தியெம் பெருமான் முதற்சன குமர ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள் அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர் மெய் கண்டார் அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும் புறச்சந்தா னத்தி னாரியரே"
- காஞ்சிப் புராணம்

 நாமும் நம்முடுடைய குருமார்களாகிய புறச்சந்தான குரவர்கள் பற்றி சிந்தனை செய்து அவர்கள் காட்டிய சைவ நெறியில் நின்று அவனருள் பெற முயற்சி செய்வோம் 
புறச்சந்தான குரவர்கள் 
1. மெய்கண்டர்
2. அருள் நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்
     
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 4

              திருச்சிற்றம்பலம் 
புறச்சந்தான குரவர்கள் - 4
உமாபதி சிவாசாரியர்



உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு நூல்களை இயற்றியவர் இவரே.

இளமைக் காலம்

13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர்.

நூல்கள்

மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை.
இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கித் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோயிலின் வரலாற்றைக் கோயிற் புராணம் என்னும் பெயரில் 100 பாடல்களால் பாடியுள்ளார். திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை என்னும் பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவையே. 

கொடிக்கவி பாடிய வரலாறு

சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம். அப்போது சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.
          
               மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 3
மறைஞான சம்பந்தர்



மறைஞானசம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். சந்தான குரவர் மரபில் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராக விளங்கியவர். மெய்கண்ட தேவரைப் போன்று பக்குவ நிலையை எய்திய மறைஞானசம்பந்தர் சைவசித்தாந்த வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். மறைஞானசம்பந்தரின் சைவப் பணிகளுள் பிரதானமானது சைவசித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்தமையாகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களாகியசிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது ஆகிய நூல்களைக் கற்று அவை கூறும் சித்தாந்த உண்மைகளை தம் மாணக்கருக்குக் கற்பித்தார்.
மறைஞானசம்பந்தரது பெருமைகளையும், அவரது சைவ சித்தாந்தப் பணிகளையும், இவரின் சீடராகிய உமாபதி சிவாச்சாரியார் தனது நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் மட்டுமே சித்தாந்த நூல்கள் எதனையும் எழுதவில்லை. 
         மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்
திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 2

அருள் நந்தி சிவாச்சாரியார்





அருணந்தி சிவாச்சாரியார், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.
இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.
மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்
பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
நூல்கள்
மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே.
சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
    திருச்சிற்றம்பலம் 

புறச்சந்தான குரவர்கள் - 1


 திருச்சிற்றம்பலம் 


புறச்சந்தான குரவர்கள்  - 1 
மெய்கண்டார்

சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதான சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.
மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், வேளாண் குடியில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
பிறப்பு
திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை. அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"
சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை, பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசிக்கலானார்கள். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
கனவிலிருந்து விழித்துக்க் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்த கனவினை, தன மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
இளம் பராயம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார். இப் பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும்.
நூற் பணி
தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களை தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல்
இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
முத்தி
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்


திருச்சிற்றம்பலம் 

Saturday, 12 March 2016

நாயன்மாரில் பெண்கள் - 3

திருச்சிற்றம்பலம் 
சைவா போற்றி, தலைவா போற்றி!


நாயன்மாரில் பெண்கள்  - 3

இசைஞானியார் நாயனார் 

"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்" 
- திருத்தொண்டத் தொகை


பூசை_நாள் = சித்திரை சித்திரை
அவதாரத்_தலம் = ஆரூர் (கமலாபுரம்) 
முக்தித்_தலம் = திருநாவலூர்


திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் ''இசைஞானியார்''. அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். 

திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்.

இறைவனின் குழ்ந்தைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது
என்பதையே நாயன்மார்களில் பெண்கள் என்கிற பதிப்பு நமக்கு உணர்த்துகிறது.
மாதொரு பாகனான நம்பெருமான் தன் அடியார்கள் மூலமும் நமக்கு உணர்த்துகிறார்.

ஆடக மதுரை அரசே போற்றி
கூட விளழ்ந்கு குருமணி போற்றி


திருச்சிற்றம்பலம்

நாயன்மாரில் பெண்கள் - 2

சிவமயம்
திருச்சிற்றம்பலம் 

நாயன்மாரில் பெண்கள்  - 2
மங்கையர்க்கரசியார் நாயனார்

“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” 
–திருத்தொண்டத் திருத்தொகை.



பெயர்: மங்கையர்க்கரசியார் நாயனார்

பூசை நாள்: சித்திரை ரோகிணி
அவதாரத் தலம்: பழையாறை (கீழப் பழையாறை)
முக்தித் தலம்: மதுரை 


மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து
  மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண்
சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல
    சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த
பொங்குதிரு வருளுடைய போத வல்லி
    பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட னருளா லின்பஞ்
    சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.


(திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டவர்)

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். 

மங்கையற்கரசியார் சோழமன்னனின் தவக்கொழுந்தாய் அவதரித்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.
பாண்டிய மன்னன் தாம் செய்த தீவினைப் பயனாய் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையயோரெல்லாம் சமண சமயத்தவராகவே இருந்தனர். இவ்வண்ணம் சமண இருள் சூழ்ந்து சைவம் குன்றியிருந்தமை குறித்து மங்கையர்க்கரசியார் மனம் நொந்தார். அவர் பாண்டி நாடெங்கும் சைவ வாய்மை விளங்க வேண்டுமென்ற கருத்தினராய் இருந்தார்.

இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இந்நற்செய்தியைக் கேள்விப்பட்டதும் தன் மனக்கருத்து நிறைவுள்ளது எனக் களிப்புற்றார். சம்பந்தப்பிளையார் தொலைவில் இருந்தாலும் அவர்தம் திருவடியைக் கும்பிட்டதோர் மகிழ்ச்சி கொண்டார். அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் பரிசனத்தாரை அனுப்பிவைத்தார். பரிசனத்தார் சென்று பரசமயக்கோளரியாரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தப்பிள்ளையாரும் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளத் திருவுளம் பற்றினார்.சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்தவள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.
ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைச் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியார்ப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.

பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன?. துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்?. கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.

அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான்.

அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.

சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார்திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கல நீறணந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.

சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார்அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார். மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

     திருச்சிற்றம்பலம்