Monday, 28 March 2016

திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி )

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
           திருமுறை அருளாளர்கள் - 3 (தொடர்ச்சி ) 
(ஒன்பதாம் திருமுறை

திருமாளிகைத் தேவர்


திருவாவடுதுறை - நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த போக ருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர். திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். சோழ மன்னர்களுக்குத் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரி யோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகைமடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார்.

``போகர் திருமாளிகைத் தேவருக்கு நடராசப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூசைசெய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூசித்த நிர்மாலியத்தைக் கருவூர்த் தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூசித்த நிர்மாலியத்தைத் திரு மாளிகைத்தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச் சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர்,` திருமாளிகைத் தேவர் செய்ததே சரி` என்று கூறி `இறைவனைப் பூசிக்கின்ற பூசையே மிகச்சிறந்தது; அவர், நீர் தந்த பூசைப்பொருள்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை`, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாத ருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத் தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார்.

ஒருநாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து `இதனைப் பூசித்துக்கொண்டு இத்திருவாவடு துறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக` என ஆணை தந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென் றார். திருமாளிகைத்தேவர் குரு ஆணைப்படி,

திருக்கூட்டச் சிறப்பினொடும் செபந்தவந்தியானம் நிட்டை
உருக்கமோ டிருந்துசெய்தற் காகுநல் லிடமா யோங்கும்
பொருப்புறழ் விமானக்கோயில் அருகு தென்புறத்தின் மேவ
அருத்தியி னொடுமிக் கான திருமட மொன்றுண் டாக்கி.
-திருவாவடுதுறைப் புராணம்

தேசிகர் பணித்த வண்ணம் செய்கை தப்பாமல் பேணி
மாசிலா மணிபொற் பாதம் நாடொறும் வணங்கி மிக்க
நேசமொ டாசான் செம்பொன் திருவடி நேர்வைத்தர்ச்சித்
தாசையொ டடியார் கூட்டத்துடன் கலந்தமர்ந் தெந்நாளும்``
-திருவாவடுதுறைப் புராணம்

நவகோடி சித்தர்க்கெல்லா மிடங்கள் நன்கமையப் பண்ணி சிவசமயத்தை நாளும் வளர்த்து நற்செய்கையோடும்

தவமலி நீற்றின் சார்பு உழைத்திடச் சமாதி யோகம்
உவகையொடியற்றி மூல எழுத்தைந்து மோதி.
-திருவாவடுதுறைப் புராணம்

அத்தலத்திலேயே அடியார்கள் பலரோடு மாசிலாமணியீசர் கோயிலுக்குத் தென்புறம் திருமடம் ஒன்று அமைத்துக்கொண்டு தங்கியிருந்தார்.

ஒருநாள் சேந்தனாரோடு சிதம்பரம் சென்று திருவிசைப்பாப் பதிகங்களால் ஞானமா நடேசனைத் தோத்திரித்து மீண்டும் திருவாவடு துறைக்கு எழுந்தருளி மாசிலாமணி ஈசரையும் அம்பிகையையும் திருவிசைப்பாப் பதிகம் பாடிப் போற்றி அத்தலத்திலேயே தங்கியிருந்தார்.

திருமாளிகைத்தேவர் ஒரு நாள் காவிரியில் நீராடி, பூசைக் குரிய நறுமலர்களை எடுத்துக்கொண்டு திருமஞ்சனக் குடத்துடன் தம் திருமடத்திற்கு வந்துகொண்டிருந்தார். எதிரே பிணப்பறை முழங்க இறந்தவர் ஒருவரின் உடலைச் சுடலைக்கு எடுத்துக்கொண்டு பலர் வருவதைப் பார்த்தார். வழி குறுகியதாக இருந்தது. விலகிச் செல்வ தற்கும் இடமில்லை. பூசைசெய்யும் ஆசாரத்தோடு செல்லும் தமது தூய்மைக்கு இழுக்காகுமெனக்கருதி, திருமஞ்சனக்குடம் முதலிய வற்றை ஆகாயத்தில் வீசி அங்கேயே அவைகளை நிற்கச் செய்து, வழியின் மேற்புறத்தில் எழுந்தருளியிருந்த பிள்ளையாரைத் தோத் திரித்தார். பிள்ளையார் அருளால் பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து சென்றது. எல்லாரும் வியப்புற்றனர். இவ்வாறு இறந்தவரை எழுப்பித் தந்த அவ்விநாயகருக்குக் கொட்டுத் தவிர்த்த கணபதி என்ற பெயர் இன்றும் வழங்கி வருகிறது.

திருமாளிகைத்தேவரை, பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தங்கள் மனத்தால் தியானித்து அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர். அவர்கள் பெற்ற குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே இருந்தன. அதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்று அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் கி.பி. 825-850 என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் என்ற தங்கள் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.

அதைக்கேட்ட நரசிங்கன் சினந்து, திருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர் சிலரை அனுப்பினான். அரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள் மதிமயங்கித் தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசனை அடைந்தனர். அதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், படைத்தலைவர்கள் பலரை அழைத்து, தேவரைக்கொண்டு வருமாறு அனுப்பினான். வந்த படை வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாய்ந்தொழிந் தார்கள். இதை அறிந்த மன்னன், நால்வகைச்சேனைகளோடும் தானே திருமாளிகைத்தேவர் மேல் படைதொடுத்து வந்தான். குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோலத் தேவர் ஒப்பிலா முலையம்மையிடம் சென்று விண்ணப்பித்தார். அம்பிகை மதில் நந்திகளையெல்லாம் அழைத்து ஒரு நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள். நந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார். அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இரந்தான். திருக் கோயிலுக்குச் சென்று இறைவனைப் பணிந்து நின்றான். திரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை வணங்கினார்; அரசன் அருள் பெற்றுச் சென்றான்.

திருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றுள்ளது.

இவ்வரசன் வந்து தங்கிய இடம் நரசிங்கன் பேட்டை என வழங்குகிறது. இவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலில் நந்திகள் இல்லை. பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.

அற்புதங்கள்:

திருமாளிகைத்தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த சவத்தின் புகையை நறுமணம் கமழும்படிச் செய்தார். கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச்செய்தார். சிவபெருமானுக்கு நிவேதனமாகித் தமக்கு வந்த பயிற்றஞ் சுண்டலை தம் திருமடத்தில் பாத்திகட்டி விதைத்து பலன்பெறச் செய்தார். இவர் திருவீழிமிழலையில் இருந்த காலத்தில் அங்கு நடந்த தேர்த் திருவிழாவின்போது மக்களால் இழுக்கமுடியாது ஓடாதிருந்த தேரை வடத்தைக் கழற்றிவிட்டுத் தானே அத்தேரினை ஓடுமாறு செய்தார். இன்னோரன்ன அற்புதங்கள் அனைத்தையும் தொகுத்து, தொட்டிக்கலை ஷ்ரீ சுப்பிரமணிய முனிவர் பின்வருமாறு பாடியுள்ளார்.

குடங்கர் விசும் பிடைநிறுவிக் குணபம் நடந்
திட இயக்கிக் கொடிஞ்சிப் பொற்றேர்
வடங்கழற்றி ஓட்டிமதில் நந்திகளை
வர வழைத்து வரைநன் காட்டின்
உடம்பின்எழு புகைமாற்றிக் கொங்கணர்பாத்
திரம்சுவற்றி உணவ தாய் வெந்
திடும்பயறு முளைசெய்தெமக்(கு) அருள்திருமா ளிகைத்தேவர் இணைத்தாள் போற்றி.
-தனிப்பாடல்

திருவாவடுதுறை ஆதீனத்திருமடத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திரு உருவம் நான்கு திருக்கைகளோடு கூடியதாய் அமைந்துள்ளது. இவர் குரு பணி விடை செய்யவும் சிவபூஜை செய்தற்பொருட்டும் தமது தவ வலிமை யால் வேறு இரண்டு திருக்கைகளை உண்டாக்கிக் கொண்டார் என்பது செவிவழிச் செய்தியாகும். ஷ்ரீ கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தவுடன் திருமாளிகைத்தேவருக்கும் அச்சிவாசாரியராலேயே அபிஷேக ஆராதனைகள் செய்விக்கப்பெறுகின்றன. அதன் பின்னரே மடாலயத்தில் மாகேசுவர பூசை நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இம்மரபை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தனிப்பாடலால் நாம் நன்கு அறியலாம்.

பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன் வீசுகழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
கருதுபந்தி யாதல்வழக் கம்.
-தனிப்பாடல்

திருப்பதிகங்கள்:

திருமாளிகைத்தேவர் தில்லைச் சிற்றம்பலத்துப் பெரு மானைப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத் திருப் பதிகங்கள் நான்கு ஆகும்.

காலம்:

தஞ்சையில் இராசராசேச்சுரம் என்னும் பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) அக்கோயிலின் கைங்கரியங்களுக்குத் தளிச்சேரிப் பெண்கள் (தேவர் அடியார்கள்) சிலரை நியமித்தான். அவர்களில் ஒருத்தி பெயர் `நீறணி பவளக் குன்றம்` என்பதாகும். இத்தொடர் திருமாளிகைத் தேவரின் திரு விசைப்பா முதற்பதிகத்து ஆறாம் பாட்டின் முதல் அடித் தொடக்க மாகும். எனவே திருமாளிகைத்தேவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்கு முற்பட்டது என்பது தெளிவு. இவரது காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
 திருச்சிற்றம்பலம் 
  

No comments:

Post a Comment