Friday 25 March 2016

கொங்கேழ் தலங்கள்

கொங்கேழ் தலங்கள் 

திருநணா (பவானி),

திருச்செங்கோடு, 
கருவூர் (கரூர்),
திருமுருகன் பூண்டி, 
திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி),
திருப்புக்கொளியூர் (அவிநாசி), 
வெஞ்சமாக்கூடல் 

ஆகிய ஏழும்‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.

மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி:

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடி நாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி.

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு.
காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை.

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய நமச்சிவாய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கிமீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment