Monday 28 March 2016

திருமுறை அருளாளர்கள் - 2

திருச்சிற்றம்பலம் 
திருமுறை அருளாளர்கள் - 2

தெய்வ சேக்கிழார்  


தெய்வ சேக்கிழார்  என்று சொல்லும்போதே உடலும் உள்ளமும் உருகி இரு கை கூப்பி தொழுகிறது, அடியார்களின் பெருமையும் ஈசனினின் அருளும் உள்ளூர பெருகி கடை விழியோரம் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உலகாளும் நாயகனே உலகெலாம் என எடுத்து கொடுத்த அருளினை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போகிறது.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

இளமைப் பருவம்

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழனின் என்ற அநபாயசோழருக்கு 

கடலினும் பெரியது எது 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

உலகினும் பெரியது எது

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

மலையினும் பெரியது 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

அமைச்சர் பணி

இரண்டாம் குலோத்துங்க சோழன் கேளிக்கைகளில் மனதினை செலுத்தி், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார்.

திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்

பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார். ஓராண்டில் 4286 பாடல்களுடன் திருத்தொண்டர் வரலாற்றினை புராணமாக தந்தார்.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இயற்றியுள்ள நூல்கள்
  1. பெரிய புராணம்(உலகெலாம் என தொடங்கி, உலகெலாம் என முடிக்க பெற்ற சிறப்புடைய நூல்)
  2. திருத்தொண்டர் புராணச் சாரம்
  3. திருப்பதிகக்கோவை 

என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள்
         
 மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

    திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment