Saturday, 12 March 2016

நாயன்மாரில் பெண்கள் - 1

திருச்சிற்றம்பலம் 

நாயன்மாரில் பெண்கள்  - 1

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். 

# கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். 

# மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். 

#திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

இன்று நாம் சிந்திக்கும் அம்மையார்  நம் பெருமானே அம்மையே என்றழைத்த சிவனருள் அன்னை  காரைக்கால் அம்மையார். 



காரைக்கால் அம்மையார்
பெயர்: காரைக்கால் அம்மையார்
காலம்: கி.பி. 300-500
பூசை நாள்: பங்குனி சுவாதி
அவதாரத் தலம்: காரைக்கால்
முக்தித் தலம்: திருவாலங்காடு

"சாயா வன்பினை நடொருது அழைப்பவர்,தாஎயகி வளர்த்தனை போற்றி!"

வணங்கும் சிறுத்தொண்டர்
வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு
எம் அடிகளே
திருஆலங்காட்டுத் திருப்பதிகம்(திருஞானசம்பந்தர்)

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். 

  1. அற்புதத் திருவந்தாதி, 
  2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், 
  3. திரு இரட்டை மணிமாலை 
போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.

இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான். மனைவியார் அதைக்கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று நினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் அதனைச் சொல்லாது விட மாட்டாதவருமாய் வருந்தி நின்று பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி அவருடைய திருவருளினாலே அழைத்துத் தா" என்றான். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, அவனிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலை கூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவனிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று நினைந்து, சிவிகையில் ஏற்றிக்கொண்டு சென்று, அவனிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதியாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித் தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை" என்றார்கள். அதற்குப் பரமதத்தன்" இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான், அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடப்பத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று சிந்திக்கச் செய்யும் பொருட்டுத் தாம் ஆச்சரியமுடையவராகி, அவரது பத்தி மகிமையை உயர்வொப்பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினாலே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு, அக்கடவுளை வணங்கி நின்று, "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment