Tuesday 8 March 2016

தமிழ் வேத இயல்

திருச்சிற்றம்பலம் 
தமிழ் வேத இயல்




தமிழ் வேதங்கள் எனபோற்றபடும் தேவாரம் மற்றும் திருவாசகங்களையும்,சமயகுரவர்களின் அற்புதங்களையும் கேள்விபதில் வடிவில் இங்கு ஒரு சிறிய பதிவு.

சைவ சமயிகள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை  
   
தேவாரம், திருவாசகம் இரண்டுமாம்.

தேவாரம் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்,
திருநாவுக்கரசு நாயனார்,
சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

திருவாசகம் செய்தருளியவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

சோழ நாட்டில் உள்ள சீர்காழியிலே திருவவதாரம் செய்தருளினார்.

திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவசமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

யாது காரணத்தினால் இவர்கள் சைவ சமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

சைவத்தின் வழி உய்வு பெற வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல அற்புதங்களைக் கொண்டு சைவ சமயமே மெய்ச் சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெறுவார்கள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?

  • மூன்றாம் வயதிலே உமாதேவியார் கறந்து பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
  • சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.
  • திருமறைக்காட்டிலே வேதங்களினாலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப் பாடினது.
  • பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.
  • பாண்டியனுக்குக் கூனையும், சுரத்தையும் போக்கினது.
  • சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை தீயிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
  • வைகை ஆற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.
  • புத்த நந்தியுடைய தலையில் இடி விழச் செய்தது.
  • ஆற்றிலே தாமும் அடியவர்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.
  • ஆண் பனைகளைப் பெண் பனைகளாக ஆக்கினது.
  • விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.
  • விடத்தினால் இறந்த பெண்ணுடைய எலும்பைப் பெண் ஆக்கியது.
  • தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு தீயிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.

திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?

  • சமணர்களாலே ஏழு நாள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற் சோற்றை உண்டும் சாவாது பிழைத்தது.
  • சமணர்கள் விடுத்த யானையினால் வலம் செய்து வணங்கப் பட்டது.
  • சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிக் கடலிலே இடவும், அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
  • சிவபெருமானிடத்தில் படிக்காசு பெற்றது.
  • திருமறைக்காட்டிலே வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப்பாடினது.
  • விடத்தினாலே இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தது.
  • கயிலைக்குச் செல்லும் வழியில் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கயிலைக் காட்சி கண்டது.

சுந்தரமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?

  • செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
  • சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள மணி முத்தாறு ஆற்றிலே போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே ( கமலாலயம் ) எடுத்தது.
  • சிவபெருமான் திருவருளால் இழந்த இரு கண்களின் பார்வையையும் மீண்டும் பெற்றது.
  • சிவபெருமானையே பரவையார் மனைக்குத் தூதராக்கியது.
  • காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.
  • முதலை விழுங்கிய பிள்ளையை அம்முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்தது.
  • வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கயிலாயத்திற்கு எழுந்தருளினது.

மாணிக்கவாசக சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?

  • சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக் கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.
  • புத்தர்களை வாதினில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமம் தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.
  • பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமம் தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
  • தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக் கொண்டது.
  • எல்லாரும் காணப் பொற்சபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவ சமயமே மெய்ச் சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து அருச்சித்து, வழிபாடு செய்து, இருந்து கொண்டு அன்புடனே ஓதுதல் வேண்டும். புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும் வைக்கல் ஆகாது.

தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

எல்லா நலனும் பெற்று, சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தை அனுபவிப்பர்.

          மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
   திருச்சிற்றம்பலம் 


No comments:

Post a Comment